Sunday 26 May 2013

Phoenix

எண்ணங்கள் 
உதிர்த்து 
என்னை எரித்து 
எரியும் தணலில் 
எனையே 
வடிப்பேன் ...

உயிரின் தீபம் 
உறையும் தினம்வரை 
ஒவ்வொரு கணமும் 
உயிர்த்தெழுவேன்..

எனக்கு நான் 
ஒரு போதிமரம் ,
சில பொழுதில் 
அதுவே எந்தன் 
சிலுவை மரம்..!

நீள் இரவின் விழிப்பில்..

சில சமயங்களில் 
சிக்கிக்கொள்கிறேன் 
அந்த 
சுவற்று மூலை 
சிலந்தி வலைக்குள்.

பின்னல்களினூடே 
ஒட்டிக்கொள்கிறது 
எனது  விழிப்பார்வை 
விதி தெரியாமல் 
வந்த ஒரு 
விட்டில் பூச்சியாய்..

எட்டு கால்களிடையே 
இரையாகிவிட்டது 
எண்ணச்  சுழற்சி.

விடுபட்டு 
வெளிவரும் பொழுதில் 
ஒட்டடையாகிவிடும் 
சிந்தனைகள்..
அந்த சிலந்தி 
தொலைத்த 
சின்ன வலைபோல்..



நாம் கடந்த 
பாதைகளை 
என்றாவது ஓர் நாள் 
தனித்து கடக்கையில் 
நினைவு கொள்...
சுவடுகள் 
தொலைந்தாலும்,
இங்குதான் 
நம் கனவுகள் 
விதைத்தோமென்று ..


விட்டு விடுதலையாகி

என் கூட்டின் 
ஜன்னலோரம் 
உலகம் தரிசிக்கும் 
பொழுதில் , 
சிறைக்கு வெளியே 
ஓர் சிட்டுகுருவி 
சிரித்து செல்லும்..


கல்வாரி மலையினை
செப்பனிட்டொம்..,
முள்முடி, சிலுவை
புதிப்பித்தோம்.

ஏனோ ?
இன்னும் வரவில்லை
இயேசு.

நினைவின் சிறகு

ஓர் இரவுக் 
கனவில் 
என் விலங்குகள் 
வெட்டி 
விண்ணில் ஏறினேன்,
காற்றின் திசையில் 
கட்டற்றழைந்தேன்,
புயலில் சுழன்று 
தென்றலில் தவழ்ந்தேன்..

தோட்டங்கள் 
கடந்தேன்,
பூக்களில் 
அமர்ந்தேன்..

நிசப்த இரவில் 
நிதானமாய் வீழ்ந்தேன் 

வீழ்ந்த போது 
விளங்கியது 
வெட்டியது 
விலங்குகளல்ல...
வேர்கள்.

அகல்

திரியின் விளிம்பில் 
ஒளியின் 
விழி..

காற்றில் அசையும் 
வெளிச்ச 
நாற்று..

அகல் குளத்தில் 
தீப தாமாரை..!

வரம்

நுனி புல்லின் 
பனி பூக்களில் 
பாதம் பட...
பட்டாம்பூச்சி 
ஆகவேண்டும்.

கவிதைகள்

எங்கோ 
ஓர் தோப்பில்
குயிலோசை 
மொழிபெயர்க்கிறது..
என் 
இதயத்தின் மௌனத்தை.


பயனற்றுபோன 
ஒற்றையடிப்பாதையில்,
மீண்டும் புற்கள்..!

Thursday 23 May 2013

ஒளி தெரிந்தும்
வெளிச்சமில்லை..
எதிர்வீட்டில் அகல்.
நிகழ்வுகள் என்றும்
இடைவெளியற்று ,
இலை உதிர்வும் தளிர் உயிர்ப்பும்...
மேகங்கள் நகர்ந்தபின்
மீதமுள்ளது..,
மலையடியில் ஈரம்.
ஜன்னலோர கொடி,
யாருக்கும் தெரியாமல்
என்னறையில் பூக்கிறது..
இரவு மழையில்
விழித்தபொழுது,
குருவிகள் நினைவு
விழித்திருக்கும் போது
வெகுதொலைவில்
விடியல் ...
ஓடை பரப்பில்
நாரை பறக்கையில்
நீருக்குள் அதிர்வு !