Thursday 3 April 2014

முழுமை பெற்றது 
இந்த கோடைகாலம் 
எங்கோ ஓர் குயில் 
நீரில் கல்லெறிந்து 
காத்திருக்கிறேன் 
நிலவு சேர... 
நிசப்தத்தினுடே
நிலவு அசைகிறது ...
நீருக்குள் மீன்கள் 
நொடிமுள் சப்தம் 
இரவை கடக்கையில் 
காலம் நிற்கிறது

குளக்கரை படிகளில் 
ஏறிச்செல்கிறது ...
ஈர சுவடு 
இரைக்கும் பல்லிக்கும் 
இடையில் சிக்கியது 
பார்வை..
உள் வழி 
கடக்கையில் 
வெளி விரிகிறது 
பின் இரவு 
இதழ் விரிக்கிறது 
நாளை உதிரும் பூ 
வனத்தினுடே அஸ்தமனம் 
மொழியில் அடங்காது 
முழுமை ...

பழைய பாலம் 
ஒவ்வொருமுறையும் 
புதிய ஆற்றை கடந்து...
அறுவடை வயல்களில் 
உதிர்ந்து கிடக்கிறது 
மயிலிறகு
வேர்கள் அற்று 
மரம் பூக்கிறது 
கொடி போர்த்தி...
மார்கழி விடியல் 
புல்வெளி எங்கும்
சூரிய துளிகள்..  
மழைக்கால தூறல்
உலர்ந்து கிடக்கும்
ஈசலிறகு.. 
காற்றில் 
 நிழல் அசைகிறது... 
 விளக்கினடியில் 
இருளின் அடர்வில்
தொலைவில் நகரும்
ரயிலின்  ஜன்னல் !
வானிலிருந்து வீழ்ந்தும் 
பூமி தாண்டி சிதறாமல்..
மழைத்துளி 
கோடை  இரவு 
நிலவின் வழியில் 
தூறல் மேகம்...